இன்று தீபாவளி பண்டிகை

இந்தப் பண்டிகை இந்துக்களால் மாத்திரமன்றி சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களிடையே மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், வெவ்வேறு நாட்களில் அரச விடுமுறையுடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலும் ஐப்பசிமாத அமாவாசை நாளில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையின் பின்னணியில், பல்வேறு வரலாற்று காரணங்கள் கூறப்படுகின்றன.
இதன்படி, இராமர் தமது 14 வருட வனவாசத்தை முடித்துக்கொண்டு, இலட்சுமணன் மற்றும் சீதையுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தை மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடியதாக ஒரு கதை உண்டு.
மறுபுறத்தில், கிருஷ்ண பகவான் நரகாசுரனை வதம் செய்த தினமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
அத்துடன், மகாலட்சுமியை வரவேற்கும் நாளாகவும், புதுக் கணக்கு தொடங்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
சீக்கியர்கள் குரு கோபிந்த் சிங் விடுவிக்கப்பட்டதை நினைவுகூர்வதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சமுக செயற்பாட்டாளரான பண்டிதர் அயோத்திதாசர் எழுதிய நூலில் தீபாவளி பண்டிகை பௌத்தப் பண்டிகை அதை பிராமணர்கள் திருடிக்கொண்டதாக கூறப்படுகிறது.
எத்தனை கதைகள் கூறப்பட்டாலும், அத்தனையையும் புறந்தள்ளி கொண்டாட்டம் மட்டுமே ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகையின் போதும் முன்னிலை வகிக்கிறது.
இருப்பினும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இலங்கை போன்ற சில நாடுகள் இம்முறை தீபாவளிப் பண்டிகையை வழமைபோன்று கொண்டாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.