“இந்த அரசாங்கத்திற்குத் தார்மீக உரிமை இல்லை” – விமல் வீரவன்ச
7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (01) 7-வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
முதலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரும் உடல்நிலை பாதிக்கப்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் இருவர் நேற்று (31) சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.
இதற்கிடையில், இன்று முற்பகல் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அவர்களும் அந்த இடத்திற்கு வருகை தந்தார்.
அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச, “இதை மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டும். இவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு அரசாங்கத்திற்கு இவ்வாறான கடுமையான எதிர்வினையாற்ற உரிமை இருந்தாலும், இந்த அரசாங்கத்திற்குத் தார்மீக உரிமை இல்லை… காரணம், இவர்கள் அன்று இந்தக் கோஷங்களை உயரிய அளவில் ஏற்றுக்கொண்டவர்கள். அவற்றை நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கையை அளவுக்கு அதிகமாகக் கொடுத்தவர்கள்…” என்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றைப் பெற்றுக்கொடுக்கத் தயார் என்ற உறுதியை ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் டி. கமகே வழங்கிய போதிலும், நாளைக்கு முன்னதாகத் தமக்குக் கலந்துரையாடல் கிடைக்க வேண்டும் என்று உண்ணாவிரதக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு வழங்கப்படாவிட்டால் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
