Main Menu

இந்திய பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா-வின் உயரிய விருது வழங்கி கௌரவம்

உலகத் தலைவர்களில் முதன்முறையாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடியின் மூன்று நாடுகளுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் செவ்வாய்க்கிழமை (16) எத்தியோப்பியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இச்சுற்றுப்பயணத்தின் போது, எத்தியோப்பியாவில் அவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

எத்தியோப்பியாவை சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர், பிரதமர் அபி அகமது, பிரதமர் மோடியை தன்னுடன் காரில் அழைத்து சென்றார்.

எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது உரையாற்றிய பிரதமர் மோடி, “ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவும் எத்தியோப்பியாவும் தகவல் தொடர்பு, கலாசார பரிமாற்றம் மற்றும் வணிகத் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறுதியான உறவுகளை பேணிவந்துள்ளன” என தெரிவித்துள்ளார்.

மேலும், “பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு போன்ற முக்கிய அம்சங்களில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் கல்வி பயிலும் எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவித் தொகையை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “பன்முகத் தன்மையில் ஒற்றுமையை பிரதிபலிக்கும் மொழி வளமும், செழுமையான பாரம்பரியங்களும் கொண்ட நாடுகளாக இந்தியாவும் எத்தியோப்பியாவும் திகழ்கின்றன. அமைதி மற்றும் மனித இன நலனுக்காக செயல்படும் ஜனநாயக சக்திகளாக இரு நாடுகளும் உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருதான ‘தி கிரேட் ஹானர் – நிஷான் ஆப் எத்தியோப்பியா’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது, பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

இந்த விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். இதன் மூலம், வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 28-வது உயரிய விருது என்ற சிறப்பையும் இது பெற்றுள்ளது.

விருதைப் பெற்றுக்கொண்ட போது இந்திய பிரதமர் மோடி,

“இந்தியர்கள் அனைவரின் சார்பாக இந்த உயரிய விருதை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். உலகின் மிகத் தொன்மையானதும், செழிப்பான நாகரிகம் கொண்டதுமான எத்தியோப்பியா வழங்கிய இந்த அங்கீகாரம், மிகுந்த பெருமைக்குரியதாகும்”. “இந்த விருது, இரு நாடுகளின் நல்லுறவை உருவாக்கி வலுப்படுத்திய எண்ணற்ற இந்தியர்களுக்கே உரியது. இதனை 140 கோடி இந்தியர்களுக்கு நான் அர்ப்பணிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...