இந்திய – இலங்கை நட்புறவை வலுவாக்க சஜித் பிரேமதாசவின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது : சஜித்துடனான சந்திப்பில் மோடி தெரிவிப்பு
இந்திய – இலங்கை நட்புறவை வலுவாக்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் பங்களிப்பும் பாராட்டுக்குரியவை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இந்திய – இலங்கை நட்புறவை வலுவாக்குவதற்கான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாவின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் பங்களிப்பும் பாராட்டுக்குரியவை என இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இங்கு சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பலவற்றை பரஸ்பரம் இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர்.
அதேபோல், எமது நாடு வங்குரோத்தடைந்திருந்த சந்தர்ப்பத்தில் ஒரு தனி நாடாக எமது நாட்டுக்கு அதிக நிதி ஆதரவுகளை வழங்கி அதிக உதவிகளை செய்த நாடு இந்தியாவே என்றும், அத்தருணத்தில் நாட்டுக்கு உதவும் வகையில் இந்திய அரசு அளித்த ஒத்துழைப்பை பெரும் மனம் கொண்டு பாராட்டுகிறேன் என்றும், இதற்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தியப் பிரதமர் முன்னிலையில் தெரிவித்தார்.
மேலும், இந்தியா- இலங்கை நட்புறவை வலுவான அடித்தளமாகப் பேணுவதுடன், இரு நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் இலக்குகளை நிறைவு செய்து கொண்டு, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
அவ்வாறே, எமது நாடு வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார மந்தநிலையிலிருந்து மீளுவதற்கு மேலும் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய அமெரிக்கா குடியரசு எமது நாட்டின் ஏற்றுமதிக்கு விதித்துள்ள 44% பரஸ்பர வரி (Reciprocal tariffs) காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கும், அதன் ஊழியர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் நிலைமைகளையும் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். ஆகையால், இந்திய சந்தையில் எமது நாட்டின் ஆடைகள் உட்பட பிற உற்பத்திப் பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது இந்தியப் பிரதமரிடம் கௌரவத்துடன் கேட்டுக் கொண்டார்.
பகிரவும்...