Main Menu

இந்தியாவுடன் அரசாங்கம் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம் ; சாகர காரியவசம்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரந்தளித்தால் தேவையில்லாத முரண்பாடுகள் தோற்றம் பெறும். இந்தியாவுடன் அரசாங்கம் செய்துக்கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம். என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசமுறை விஜயம் நாட்டுக்கு சிறந்தது. மக்கள் விடுதலை முன்னணியை போன்று எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு எந்தவொரு எதிர்க்கட்சியும் வீதியில் பதாதைகளுடன் போராட போவதில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஓரிரு பொதுவான விடயங்கள் மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டன.

நெருக்கடியான நிலையில் இந்தியா இலங்கைக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்பதை ஒருபோதும் மறக்க முடியாது.

இரு நாடுகளுக்கும் இடையில் கைத்தாச்சிடப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும் இணக்கப்பாடுகள் இலங்கையின் இறையாண்மையை முன்னிலைப்படுத்தியதாக அமைய வேண்டும்.

இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் செய்துக்கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம். நாட்டுக்கு சாதகமாக அமையும் ஒப்பந்தங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரந்தளித்தால் தேவையில்லாத முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

பகிரவும்...