இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் – விசாரணைகளின் முன்னேற்றம் என்ன? :சட்டத்தரணி தனுக ரணஞ்சக

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தம்மால் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும், அது தொடர்பான எழுத்துமூல பதிலை எதிர்பார்ப்பதாகவும், முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.
பதில் காவல்துறை மாஅதிபருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்திலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
தாம் முறைப்பாடு செய்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இதுவரையில் எவ்வித முறையான பதிலும் தனக்குக் கிடைக்கவில்லை என, சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமது கோரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்று, 7 வேலை நாட்களுக்குள் பதிலை எதிர்பார்ப்பதாகவும், பதில் காவல்துறை மாஅதிபருக்கு அவர் கூறியுள்ளார்.
தனது முறைப்பாடு தொடர்பில் கோப்பு இலக்கம் மாத்திரமே இதுவரையில் கிடைத்துள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
எனவே, காவல்துறையின் பதிலைப் பொறுத்து தாம் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே, காவல்துறையினரால் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் செயற்படும் மனித உரிமை நிறுவனங்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்படும் என தனது கோரிக்கை கடிதத்தில் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துக் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி காவல்துறை தலைமையகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
இறுதிப்போரின் போது சரணடைந்தவர்கள், சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்து சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.
இதில், பிரதானமாக, இசைப்பிரியா எனப்படும் ஷோபா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்தநிலையில், சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகேவின் முறைப்பாட்டின் முன்னேற்றம் தொடர்பில் காவல்துறை பேச்சாளரிடம் எமது செய்தி சேவை வினவியது.
இதற்குப் பதிலளித்த காவல்துறை பேச்சாளர், முறைப்பாடுகள் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள எழுத்துமூல விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து காவல்துறை மாஅதிபருடன் கலந்துரையாடி அறியத்தரப்படும் என்று தெரிவித்தார்.