Main Menu

இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்

ஆங்கிலக் கால்வாயில் சிறு படகுகள் கடந்து செல்வதைத் தடுக்க உதவும் வகையில், பிரான்சுடன் 650 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான புதிய ஒப்பந்தம் ஒன்றை உறுதி செய்வதற்கான இங்கிலாந்தின் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன.

2023 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட தற்போதைய 475 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஒப்பந்தம், இன்று (31) நள்ளிரவு காலாவதியாக உள்ள நிலையில், புதிய மூன்றாண்டு நிதித் தொகுப்பைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பிரெஞ்சுக்காரர்கள் ஒரு குறிப்பிட்ட இடைமறிப்பு விகிதத்தை எட்டிய பின்னர் பணம் விடுவிக்கப்படும் வகையில், கடுமையான நிபந்தனைகளை இங்கிலாந்தின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், நிதியுதவியை இடைமறிப்பு விகிதங்களுடன் இணைப்பதை பிரெஞ்சு அதிகாரிகள் எதிர்த்துள்ளனர்.

இது புலம்பெயர்ந்தோரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

அதேவேளையில், தற்போதைய புள்ளிவிவரங்கள் பிரான்ஸ் 33 சதவீத எல்லைக் கடப்புகளை இடைமறிப்பதாக வெளிக்காட்டுகின்றன.

வடக்கு பிரான்சில் உள்ள புதிய புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கான கோரிக்கைகளையும் பிரிட்டிஷ் பேச்சுவார்த்தையாளர்கள் நிராகரித்துவிட்டதாக ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.