ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தேகூர் அருகே இன்று (24) அதிகாலை தனியார் சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி சுமார் 20 பயணிகளுடன் சென்ற குறித்த பேருந்து இன்று அதிகாலை 03.30 மணியளவில் எதிர் திசையில் வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டு தீப்பிடித்ததாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்தினை அடுத்து பேருந்தின் முன்பக்கத்திலிருந்து உடனடியாக தீப்பிழம்புகள் எழுந்து, வேகமாகப் பரவி, எரிபொருள் தொட்டி வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அனர்த்தத்தில் மேலும் பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கர்னூல் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகிரவும்...