Main Menu

அம்பானி மகனின் வனவிலங்குப் பூங்கா மீது நீதிமன்ற விசாரணை

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையில் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ‘வந்தாரா’ வனவிலங்குப் பூங்காவை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பூங்கா குஜராத்தின் ரிலையன்ஸ் ஜாம்நகர் வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது. 2024 இல் இந்திய பிரதமர் மோடி இந்த மையத்தை திறந்து வைத்தார். இதுவே உலகின் மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்கா என கருதப்படுகிறது.

இங்கு சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் முதலைகள் என 43 வகையான இனத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளது.

இங்குள்ள விலங்குகள் குறிப்பாக யானைகள் சட்டவிரோதமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டவை என்று பரவலாக குற்றசாட்டு எழுந்தது. விலங்குகள் நல அமைப்புகள், ஆர்வலர்கள் தரப்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சட்டதரணி சி.ஆர்.ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவில் வந்தாரா மையத்தின் செயல்பாடுகள் குறித்து சுகின் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் மிதல் மற்றும் பிரசன்னா பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை விசாரணை செய்தது.

இந்நிலையில், யானைகளை சட்டவிரோதமாக சிறைபிடித்தது மற்றும் பிற குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் தலைமையில் ஒரு விசேட விசாரணைக் குழுவை (SIT) அமைக்க இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதிக்குள் SIT தனது அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிரவும்...
0Shares