Main Menu

அமெரிக்க தீர்வை வரி இன்று முதல் அமுல் – அதனைத் தடுக்கும் முயற்சி தோல்வி:ஐ. தே. கட்சியின் முன்னாள் பா. உறுப்பினர்

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருக்கும் 30வீத தீர்வை வரி இன்று முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில், வரியை குறைத்துக்கொள்ள அமெரிக்காவுக்கு சென்ற அரசாங்கத்தின் தூதுக்குழுவினரால் அதனை செய்ய முடியாமல் போயிருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் நூற்றுக்கு 10 வீதத்தில் இருந்து 44 வீதமாக அதிகரித்திருந்தார். ஜனாதிபதி ட்ரம்பின் இந்த தீர்வை வரி அதிகரிப்பு அனைத்து நாடுகளுக்கும் அதிகரிக்கப்பட்டிருந்தது. என்றாலும் அதிகமான நாடுகள் உடனடியாக செயற்பட்டு, இராஜதந்திர அடிப்படையில் அமெரிக்காவுடன் கலந்துரையாடி, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரியை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது.

என்றாலும்  இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை தொடர்பில் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தவிட்டு, இறுதிக்கட்டத்தில் பிரதி அமைச்சர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று அமெரிக்காவுடன் கலந்துரையாட சென்றது. அந்த கலந்துரையாடலின் மூலம் 44வீதமாக இருந்த வரியை 30 வீதம் வரை குறைத்துக்கொள்ள அரசாங்கத்துக்கு முடியுமாகியிருந்தது. இதனை அரசாங்கம்  பாரிய வெற்றியாகவே கருதி வந்தது. இந்த வரி குறைப்பு, அமெரிக்காவில் இலங்கையின் வதிவிட பிரதிநிதியாக இருக்கும்  மஹிந்த சமரசிங்கவின் முயற்சியாலே மேற்கொள்ள முடியுமாகி இருக்கிறது. அவர் நீணடகாலம் அங்கு இருந்து வருவதால், அவரின் அனுபவத்தினால் இதனை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

என்றாலும் அமெரிக்காவின் இந்த 30 வீீத வரி என்பது எங்களால் தாங்கிக்கொள்ள முடியாத தொகையாகும். அதாவது, ஏற்கனவே இருந்த வரியைவிட 3மடங்கு அதிகரிப்பாகும். அதேநேரம் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் எங்களுக்கு போட்டியாக இருக்கும் இந்தியா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு விதித்திருக்கும் அமெரிக்காவின் வரி எம்மைவிட குறைவாகும்.

அவ்வாறான நிலையில் எமது பொருட்கள் அமெரிக்க சந்தையில் எந்தளவு விற்பனையாகும் என்பதே தற்போதுள்ள பிரச்சினை. இந்த  நாடுகள் அமெரிக்காவுடன் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு, தங்களது வரியை குறைத்துக்கொண்டுள்ளன. ஆனால் இலங்கை  அரசாங்கத்தினால்  அதனை செய்ய முடியாமல் போயிருக்கிறது.

அமெரிக்காவின் 30 வீத வரியை குறைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கத்தின் தூதுக்குழுவொன்று இரண்டாவது தடவையாகவும் அமெரிக்காவுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. என்றாலும் அமெரிக்காவின் புதிய தீர்வை வரி இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தச்சென்ற அரசாங்கத்தின் தூதுக்குழுவின் பேச்சுவார்த்தைக்கு என்ன  நடந்தது என இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லைை. அரசாங்கத்துக்கு இந்த விடயத்தில் எவ்வாறு கையாள்வது என தெரியாமையே எமக்கு30 வீத விரியை குறைத்துக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது என்றார்.

பகிரவும்...
0Shares