Main Menu

அட்டனில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தீபாவளி உற்சவம்

அட்டன் நகரில் தேசிய தீபாவளி உற்சவம்  இன்று  மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அரசாங்கத்தின் பூரண அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மும்மத குருமார்கள்,  புத்தசாசனம்,மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, மத்திய மாகாண ஆளுநர் சரத் அபயகோன்,புத்தசாசனம் மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, கிருஷ்ணன் கலைச்செல்வி, அட்டன் –டிக்கோயா நகர சபைத் தலைவர், நோர்வூட் பிரதேச செயலாளர், நுவரெலியா மாவட்ட செயலாளர்  மற்றும் நகர பிரமுகர்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், கல்வி சமூகத்தினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

காலை 9 மணிக்கு அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் விசேட பூஜைகளுடன் ஆரம்பான நிகழ்வின் போது அதிதிகள் ஆலய பரிபாலன சபையினரால் கெளரவிக்கப்பட்டனர். பின்னர் தேவஸ்தான முன்றலிலிருந்து   கலை கலாசார ,பாரம்பரிய நடனங்களுடன் ஊர்வலம் ஆரம்பமானது. இதன் போது பாடசாலை மாணவர்களின்  மும்மதங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும்  கலாசார நிகழ்வுகள் பிரதான இடத்தை வகித்தன.

இருமொழிகளிலும் தேசிய கீதம்

அட்டன் பிரின்ஸ் மண்டபத்தை ஊர்வலம் வந்தடைந்ததும் தேசிய கொடி மற்றும் நந்தி கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தேசிய கொடியையும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நந்தி கொடியையும் ஏற்றி வைத்தனர். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களால் முதலில் தமிழிலும் பின்னர் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் மங்கல விளக்கேற்றல் நிகழ்வுகள் இடம்பெற்றன. பாடசாலை மாணவர்களின் நடனம், நாட்டிய நாடகம் உட்பட பல கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.

தேசிய தீபாவளி உற்சவத்தை முன்னிட்டு  அட்டன் நகரம்  நந்தி கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தீபாவளி முதல் நாளன்று நகரின் மத்திய பகுதியில் பெருமளவு மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய வருகை தந்திருந்தாலும் தீபாவளி உற்சவ நிகழ்வுகளிலும் ஆர்வமாக கலந்து கொண்டிருந்தனர். தேசிய தீபாவளி உற்சவம் தொடர்பில் விசேட  நினைவு முத்திரை ஒன்றும் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares