Main Menu

“அகமதாபாத் விமான விபத்துக்கு விமானி தான் காரணம்” அமெரிக்க இதழின் அறிக்கையை மறுத்த விசாரணைக் குழு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 270 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (AAIB) சிறப்புக் குழு விசாரணை நடத்தியது.

“விபத்துக்குள்ளான விமானத்தில் இரு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ‘ரன்’ நிலையிலிருந்து ‘கட்ஆஃப்’ நிலைக்கு மாறியதால், விமானம் திடீரென உயரத்தை இழந்தது. விமானி ஒருவர், ஏன் கட் ஆஃப் செய்தீர்கள்? என்று மற்றவரிடம் கேட்க, அதற்கு மற்ற விமானி, நான் செய்யவில்லை என்று பதிலளித்தது காக்பிட் குரல் பதிவில் பதிவாகியுள்ளது என்று AAIBயின் 15 பக்க ஆரம்பகட்ட அறிக்கை கூறியது.

இந்நிலையில் சர்வதேச ஊடகங்கள் விமான விபத்து தொடர்பான பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்க ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அகமதாபாத் விமான விபத்துக்கு காரணமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை கேப்டன் அணைத்ததாக சுட்டிக்காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள AAIB இயக்குநர் ஜெனரல் ஜி.வி.ஜி. யுகாந்தர், “விசாரணை செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முழுமையற்ற விளக்கங்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். AAIB இன் இறுதி அறிக்கை விபத்துக்கான மூல காரணங்களை வெளிப்படுத்தும்.எனவே, விசாரணை முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், விமானிகள் சங்கமான இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP), வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரையை கண்டித்து, விமானியைக் குறை கூற முயற்சிப்பதாகக் அறிக்கை மீது குற்றம் சாட்டியுள்ளது. AAIB இன் முதற்கட்ட விசாரணை அறிக்கை எந்த விமானியையும் குறை கூறவில்லை என்பதையும் FIP சுட்டிக்காட்டியுள்ளது.

பகிரவும்...