ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட போராட்டம்
கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல வசதியாக தனி சட்டம் கொண்டு வருவதை எதிர்த்து ஹாங்காங்கில் 1 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1841-ம் ஆண்டு வரை ஹாங்காங் இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கடந்த 1997-ம் ஆண்டு சீனா கட்டுப்பாட்டுக்கு மாறியது.
ஒப்பந்தப்படி ஹாங்காங்குக்கு என்று தனி சட்டம், தன்னாட்சி உரிமை மற்றும் குறிப்பிட்ட உரிமைகள் தொடருவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. பேச்சு சுதந்திரம், நீதி சுதந்திரம், தனி சட்டம், தனியான பொருளாதார கட்டமைப்பு மற்றும் ஹாங்காங் டாலரை பணமாக தொடர்ந்து கையாள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங்கில் தனி சட்டம், தனி ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதை எதிர்த்து ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் உரிமையில் சீனா தேவையின்றி தலையிடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். அதனால் அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். முக மூடிகளையும், ஹெல்மெட்டுகளையும் அணிந்திருந்தனர்.
ரோடுகளையும், அரசு அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட வசதியாக பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், பத்திரிகை அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன.
ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் மிளகு பொடியை தூவினர்.
போராட்டம் வலுத்து வருவதை தொடர்ந்து ஹாங்காங் குற்றவாளிகளை விசாரணைக்காக சீனா அழைத்து வரும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் அந்த சட்டம் வருகிற 20-ந்தேதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.