வட கொரிய ஜனாதிபதியின் முக்கிய சந்திப்பு
வட கொரிய ஆளும் கட்சியின் உயர்மட்ட குழுவினருடன் முக்கிய கலந்துரையாடலை நடத்துவதற்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் யுன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது தற்போதைய பதற்றமான சூழ்நிலை குறித்து ஆராயப்படும் என வடகொரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, முக்கிய பல முடிவுகள் எடுக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் வியட்நாம் ஹனோயில், வட கொரிய தலைவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து உரையாடியதன் பின்னர், ஆளும் கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் வட கொரிய தலைவரை சந்திக்கின்றனர்.
வியட்நாம் பேச்சுவார்த்தை முறிவடைந்த நிலையில், பேச்சுவார்த்தைகளை தொடரும் நோக்கில், தென்கொரிய ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் சென்றிருந்தார்.
அதேவேளை, டொனால்ட் ட்ரம்புடனான பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததற்கு காரணமாக இருந்தார் என கருதப்படும் வட கொரியாவின் உயர்மட்ட ராஜதந்திரியான கிம் யொங் ஜோல் பதவி மாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.