மோடி வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்- மம்தாபானர்ஜி வற்புறுத்தல்
எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிக்கும் மோடி வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மம்தாபானர்ஜி வற்புறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 29-ந்தேதி மேற்கு வங்காளம் மாநிலம் ஸ்ரீராம்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது, பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் மேற்கு வங்காளத்தில் தாமரை மலரும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்.எல். ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.
பா.ஜனதா வெற்றி பெற்றவுடன் 40 எம்.எல்.ஏ.க்களும் அக்கட்சியில் இருந்து விலகுவார்கள். மம்தாபானர்ஜி குறைவான எம்.பி.க்களுடன் பிரதமர் கனவு காணுகிறார் என்று பேசினார்.
இது தொடர்பாக மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா கூறும்போது, மோடி குதிரை பேரத்தில் ஈடுபடுவது போல் பேசுவது அவமானமானது. அவரது வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும். அவர் பிரதமராக நீடிக்க உரிமை கிடையாது. நேதாஜி போன்ற தலைவர்களை மக்கள் மதிக்கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள்.
ஆனால் மோடியை பார்த்து பயப்படுகிறார்கள். மேற்கு வங்காளத்தில் கால் பதிக்கலாம் என்று பிரதமர் மோடி பகல் கனவு காணுகிறார். அவரது கனவு நிறைவேறாது என்றார்.
இந்த நிலையில் மோடி பேச்சு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி குதிரை பேரத்தை தூண்டும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பிரசாரத்தில் பேசி வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரது இந்த பேச்சு எங்களுக்கு அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது.
மோடியின் பேச்சுக்கு கடுமையான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். அவரது பேச்சு சட்ட விரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது.
40 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று மோடி கூறியதற்கு அவரிடம் ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டும். அந்த ஆதாரங்களை தர மறுத்தால் தேர்தல் விதி முறைகளை மீறி ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்டதாகவும் ஆத்திரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாகவும் நடவடிக்கை எடுத்து அவரது வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.