Main Menu

பெரும்பான்மை இன்றேல் கொள்கை கூட்டுக்கு தயார் – ரஞ்சித் மத்தும பண்டார

அடுத்த பாராளுமன்றத்தில் எந்தவொரு தரப்பினருக்கும் பெரும்பான்மையான மக்கள் ஆணை கிடைக்கவில்லை என்றால் கொள்கையளவிலான கூட்டணியொன்றை அமைத்து சட்டவாக்க ஆட்சி அதிகாரத்தினை முன்னெடுப்பதற்கான பேச்சுக்களை தொடர்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலின் பின்னரான சூழலில் கூட்டு அரசாங்கம் அமைப்பது பற்றி பேச்சுக்கள் அரசியல் அரங்கில் காணப்படுகின்ற நிலையில் அது பற்றிய உரையாடல்களை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதா என்பது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியானது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு பாராளுமன்றத் தேர்தலை முகங்கொடுக்கிறது. எமது கூட்டணியில் தமிழ், முஸ்லிம், மலையக் கட்சிகள் பங்காளிகளாக உள்ளன.

தற்போது வரையில் எமது கூட்டணி மிகவும் வலுவானதாகவும் பிளவுபடாத வகையிலும் உள்ளது. அந்த வகையில் மூவின மக்களும் நிதி மற்றும் சட்டவாக்க அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கான ஆணையை வழங்குவார்கள் என்ற பாரிய நம்பிக்கை எமக்குள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கடந்த ஒரு மாத கால ஆட்சியை மக்கள் அவதானித்துள்ளார்கள். அவர்களின் நிலைமையை மக்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆகவே பெரும்பான்மை பலம் கொண்ட பாராளுமன்றத்துக்கான ஆணையை மக்கள் நிச்சயமாக ஐக்கிய மக்கள் சக்திக்கே வழங்குவார்கள்.

அந்த வகையில், நாம் ஆட்சியை நிதி அதிகாரம் கொண்ட பாராளுமன்ற ஆட்சியை சிறப்பாக முன்னெடுப்போம்.

ஒருவேளை, பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் எந்தவொரு தரப்பினருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் எமது கொள்கைகளுடன் ஒத்துப்போகக்கூடிய ஊழல், மோசடிகள் மற்றும் கறைபடியாத தரப்பினருடன் ஒன்றித்து பயணிப்பது பற்றிய உரையாடல்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

அதாவது கொள்கை வழியிலான கூட்டணியொன்றை அமைப்பதற்கான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு எமது கட்சி தலைமையிலான கூட்டணியினர் தயாராகவே உள்ளனர் என்றார்.

பகிரவும்...
0Shares