பதில் அமைச்சர்கள் நியமனம் எதிராக நீதிமன்றம் செல்ல தீர்மானம்
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களது இடங்களுக்கு பதில் அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்தமை சட்டவிரோதமான செயற்பாடு எனத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ஒருவர் வெளிநாடு சென்றிருந்தால் அல்லது சுகவீனமுற்றிருந்தால் மட்டுமே பதில் அமைச்சர் நியமிக்கப்படலாம் என்றும் பதவியை அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்திருந்தால் அந்த இடத்திற்கு பதில் அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாது என்றும் சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனடிப்படையிலேயே வழக்குத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
இதேவேளை பதவி துறந்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மூவரது இடத்திற்கு அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்கிரம ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியபோதிலும் அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வில்லை என்றும் இதனையடுத்தே பதில் அமைச்சர்கள் நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.