உலகின் முதல் கருந்துளை புகைப்படம் வெளியானது
உலக வரலாற்றில் முதல் முறையாக கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.
அறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டம் நிறைவேறியிருக்கிறது. கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
கருந்துளையின் முதல் புகைப்படத்தை கருந்துளை பற்றி பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு சமர்ப்பணமாக இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் எட்டு தொலைநோக்கிகள் பயன்படுத்தி கருந்துளை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
விர்கோ கேலக்ஸி கிளஸ்டர் அருகில் மெசியர் 87இன் மத்தியில் மாபெரும் கருந்துளை கண்டறியப்பட்டதாக ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களால் மான்ஸ்டர் என அழைக்கப்படும் இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது சூரியனை விட சுமார் 650 கோடி மடங்கு பெரியதாகும். 12 ஆண்டுகள் வரை காத்திருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்சமயம் வெற்றிகரமாக கருந்துளையை புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.
கருந்துளையின் முதல் புகைப்படத்தை எடுத்திருக்கிறோம். 200-க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் மாபெரும் அறிவியல் சாதனையை படைத்திருக்கின்றனர் என திட்டத்தின் தலைவர் ஷெப்பர்டு எஸ். டோலிமேன் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஈவென்ட் ஹாரிசான் டெலஸ்கோப் (Event Horizon Telescope – EHT) என்பது உலகம் முழுக்க நிறுவப்பட்டிருக்கும் ரேடியோ டெலஸ்கோப்கள் ஆகும். இவை அனைத்தும் ஒரேமாதிரி இயங்கும். இது பூமியின் அளவு கொண்டிருக்கிறது. இதனாலேயே கருந்துளையின் நிழலை பதிவு செய்ய முடிந்தது.
புதிய அறிவியல் புரட்சி ஆறு கட்டுரைகள் வடிவில் வானியற்பியல் ஆய்வு பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.