”LIVE”ல் இந்திய வீரரை அசிங்கப்படுத்திய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்
ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதுகின்றன.
முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் வென்ற டெல்லி கேபிடள்ஸுக்கும் சிஎஸ்கேவிற்கும் இடையே இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நேற்று நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியை 147 ரன்களுக்கே சுருட்டி, 148 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுபிளெசிஸின் அதிரடியான பேட்டிங்கால் சிரமமின்றி எட்டி சிஎஸ்கே வெற்றி பெற்றது.
கடந்த சீசனில் அபாரமாக ஆடிய ராயுடு, இந்த சீசனில் படுமோசமாக சொதப்பினார். எந்தவொரு பெரிய இன்னிங்ஸையும் ஆடவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே பெரிதாக ஆடாததால் உலக கோப்பை அணியில் வாய்ப்பையும் இழந்தார். உலக கோப்பை அணியில் வாய்ப்பை இழந்தது போதாதென்று ஐபிஎல்லிலும் மோசமாக சொதப்பிவருகிறார். எனினும் சிஎஸ்கே அணி எந்தவொரு தனி வீரரையும் சார்ந்தில்லை என்பதால் வழக்கம்போல இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது.
டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராயுடு பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, அவரை வர்ணனையாளர் மைக்கேல் சிலேட்டர் அசிங்கப்படுத்தும் விதமாக கமெண்ட் செய்தார். அக்ஸர் படேல் போட்ட ஹாஃப் டிராக்கர் பந்தை ராயுடு சரியாக ஆடவில்லை. அப்போது, எனது 6 வயது மகன் கூட இந்த பந்தை பவுண்டரி அடிப்பான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சிலேட்டர், ராயுடுவை குறைத்து மதிப்பிடும் வகையில் கமெண்ட் செய்தார்.
அதற்கு, சக வர்ணனையாளர் ஒருவர், உங்கள்(சிலேட்டர்) உயரத்திற்கு உங்கள் பையன் கண்டிப்பாக அடிப்பான் என்று நக்கலாக பதிலடி கொடுத்தார். மைக்கேல் சிலேட்டர் உயரம் குறைவு என்பதால் அவரை கிண்டலடிக்கும் விதமாக சக வர்ணனையாளர் இந்த கமெண்ட்டை பதிலடியாக கொடுத்தார். எனினும் நேரலையில் ராயுடுவை அசிங்கப்படுத்தும் விதமாக சிலேட்டர் கமெண்ட் செய்தது சரியல்ல.