Main Menu

COVID-19 பரவல் எச்சரிக்கை நிலையை ஆக உச்சத்துக்கு உயர்த்தும் தென்கொரியா

COVID-19 கிருமிப் பரவல் எச்சரிக்கை விழிப்புநிலையை ஆக உச்சத்துக்கு உயர்த்துவதாய்த் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் அறிவித்திருக்கிறார்.

தென் கொரியாவில் கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்ததையடுத்து, அதிபர் மூனின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கிருமிப்பரவல் குறித்து அரசாங்க அதிகாரிகள் சந்திப்பு நடத்தியபின், செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

COVID-19 மிக மோசமான நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருப்பதாய்த் திரு மூன் சொன்னார்.

நிபுணர்களின் பரிந்துரைகளுக்கேற்ப, எச்சரிக்கை நிலை உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பரவலைத் தடுக்க, எதிர்பாராப் பல அதிரடி நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவேண்டிவரும்; அதற்குத் தயங்கவேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

தென்கொரியாவின் தென்பகுதி நகரான டேகூவில் கடந்த வாரம் நடந்த சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அங்கு கிருமித்தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

அங்கு தற்போது 602 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. சீனாவைத் தாண்டி அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நாடு தென் கொரியா.