Main Menu

9 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எழுப்பிய 9 கேள்விகள்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது. அந்த வகையில் பிரதமர் மோடி 9 ஆண்டு கால ஆட்சியை நேற்று நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது, எழுப்பிய முக்கிய பிரச்சினைகள் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு 9 கேள்விகளை எழுப்பி உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கட்சியின் மூத்த தலைவர்கள் பவன் கெரா, சுப்ரியா ஸ்ரீனேட் ஆகியோருடன் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி 9 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் பிரதமர் ஆனார். அவரிடம் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகள் எழுப்ப விரும்புகிறது. அந்தக் கேள்விகள்:- 1. இந்தியாவில் விலைவாசி உயர்வும் (பணவீக்கம்), வேலையில்லா திண்டாட்டமும் உயர்ந்து வருவது ஏன்? 2. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதும் ஏன்? 3. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகிற சூழ்நிலையில், பொதுச்சொத்துகளை பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்பனை செய்வது ஏன்? 4. 3 வேளாண்மைச் சட்டங்கள் ரத்தானபோது, விவசாயிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றாதது ஏன்? விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்படாதது ஏன்? 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு ஆக்கப்படாதது ஏன்? 5. மக்கள் சிரமப்பட்டு சம்பாதித்து எல்.ஐ.சி.யிலும், பாரத ஸ்டேட் வங்கியிலும் சேமித்த பணத்தை பிரதமர் தனது நண்பர் அதானி பயன் அடையும் வகையில் பணயம் வைப்பது ஏன்? 6. திருடர்களை தப்பி ஓட விடுவது ஏன்? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஊழல்கள் பெருகியும் நீங்கள் அமைதி காப்பது ஏன்? இந்தியர்களை கஷ்டப்பட வைப்பது ஏன்? 7. 2020-ம் ஆண்டில், சீனா எதையும் ஆக்கிரமித்து விடவில்லை என்று நீங்கள் நற்சான்று அளித்தும், அவர்கள் தொடர்ந்து இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிப்பது ஏன்? 8. தேர்தல் ஆதாயங்களுக்காக தொடர்ந்து வேண்டுமென்றே வெறுப்பு அரசியல் செய்வதும், சமூகத்தில் பயம் நிறைந்த சூழல் தூண்டப்படுவதும் ஏன்? 9. பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர். சிறுபான்மையினர் மீதான வன்கொடுமைகளில் அமைதி காப்பது ஏன்? சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையை கண்டுகொள்ளாதது ஏன்? இவ்வாறு அவர் கேள்விகள் எழுப்பினார். பிரதமர் மோடி தனது மவுனத்தைக் கலைத்துக்கொண்டு இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.

பகிரவும்...