Main Menu

தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன – இராதாகிருஷ்ணன்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டமென்பது நாட்டின் அரசமைப்பில் இருந்தாலும், அது இன்னும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் போலியான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல 13ஐ முழுமையாக அமுல்படுத்துவது வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல, 9 மாகாணங்களும் அதன்மூலம் பயன்கிட்டும்.

எனவே, தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றன.

இவற்றை அரசு கருத்திற்கொள்ளாது, சர்வதேச உடன்படிக்கையான 13ஐ அமுல்படுத்த வேண்டும்.

லண்டன், மலேசியா போன்ற நாடுகளில் உள்ளாட்சிசபைகளுக்கு உள்ள அதிகாரங்கள்கூட, எமது நாட்டில் உள்ள மாகாணசபைகளுக்கு இல்லை.

உள்ளாட்சிமன்ற தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து எதிர்வரும் 10 ஆம் திகதியே உறுதியான முடிவுக்கு வரமுடியும்.

காணி உரிமை மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மலையக அடையாளங்கள் அவசியம். அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“மலையகம் – 200“ நிகழ்வில் இதனை வலியுறுத்துவோம். அத்துடன், மலையகம் 200 நிகழ்வுக்கு தமது நாட்டின் சார்பில் சிறப்பு பிரதிநிதி ஒருவரை இந்தியா அனுப்பும்.” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...