99 வயதிலும் சேவை செய்யும் வைத்தியர் – எலிசே மாளிகைக்கு வரவேற்ற ஜனாதிபதி!
«எல்லோருக்கும் பெரும் ஊக்கம் தரும் முன்னுதாரணமாக நீங்கள் உள்ளீர்கள், நீங்கள் தரும் நம்பிக்கை அளவிட முடியாதது» என நேற்று, பிரான்சின் அதிக வயதுடைய மருத்துவரான Christian Chenay அவர்களையும் அவரது மனைவியையும், எலிசே மாளிகைக்கு, தனது பாரியார் பிரிஜித்துடன் இணைந்து வரவேற்ற போது, ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார்.
99 வயதுடைய மருத்துவரான கிறிஸ்தியோன் செனே இன்னமும் பணியாற்றிபடியே இருக்கின்றார். Chevilly Larue (Val-de-Marne) இலுள்ள தனது மருத்துவ அலுவலகத்தில் (cabinet), சில நோயாளிகளிற்குச் சிகிச்சை வழங்கினாலும், தனித்து இயங்க முடியாத முதியோர்கள் வாழும் இல்லமான EHPAD இல் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகின்றார்.
தொடர்ச்சியான முகக்கவசம் மற்றும் கைகழுவும் திரவங்கள், இவரது மருத்தவ அலுவலகத்தில் திருட்டுப் போயுள்ளதால் தனது அலுவலகத்தை மூடியுள்ள இவர், தொலைத்தொடர்பு மூலமான மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் (téléconsultations) தொடர்ந்து வருகின்றார்.
வயதான போதகர்கள், மதகுருக்கள் தங்கியிருக்கும் , தனித்து இயங்க முடியாத முதியோர்கள் வாழும் மதரீதியான இல்லமான La Congrégation du Saint-Esprit இல் இவர் தொடர்ந்தும் சிகிச்சை அளித்து வருகின்றார். கடந்த மூன்று மாதங்களிலும் இவர் சிகிச்சை அளித்துவரும் இந்த EHPAD இல் யாரும் சாவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.