83 நாட்களுக்குப் பின்னர் திருப்பதியில் பொது தரிசனம் ஆரம்பம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 83 நாட்களுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) முதல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யத் தொடங்கினர்.
கொரோனா முடக்கம் அமுலாக்கப்பட்டதால், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நாடு முழுவதும் மூடப்பட்டன. முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.
திருப்பதியிலும் 3 நாட்களுக்கு முன்னர் ஏழுமலையான் கோயில் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் அனைத்து பக்தர்களும் பொதுதரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான டோக்கன் பெறுவதற்காக திருப்பதியில் நேற்று கூட்டம் அலைமோதியது.
இதனையடுத்து இன்று காலை 7.30 மணி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பொதுதரிசனம் தொடங்கியது.
மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.