7 சிறுமிகளை தெய்வங்களாக தேர்ந்தெடுத்து நடைபெறும் ஏழைகாத்த அம்மன் கோவில் விழா!

அம்மன் தெய்வங்களாக தேர்வு செய்யப்பட்ட 7 சிறுமிகளுடன், கோவில் பூசாரி சின்னதம்பி உள்ளார்.
மேலூரை அடுத்த வெள்ளலூரை தலைமையிடமாக கொண்டும், அதன் சுற்று பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 5 மாகாணங்களாக பிரிக்கப்பட்டும், அதை வெள்ளலூர்நாடு எனவும் இந்த பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள வல்லடிகாரர் சாமியும், ஏழைகாத்த அம்மனும் இந்த பகுதி மக்களின் காவல் தெய்வங்களாக உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவிழாவாக ஏழைகாத்த அம்மன் கோவில் விழா கொண்டாடப்படுகிறது. வெள்ளலூரில் கோவில் வீடும், 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவில்பட்டியில் ஏழைகாத்தம்மன் கோவிலும் உள்ளன. திருவிழாவையொட்டி 7 சிறுமிகளை அம்மன் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கும் முதல் நாள் விழா நேற்று வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்தம்மன் கோவில் வீட்டின் முன்பு நடைபெற்றது.

வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோவில் வீட்டின் முன்பு, மூண்டவசி, வேங்கபுலி, சமட்டி, நைக்கான், சாயும்படைதாங்கி, சலிபுலி, திருமா, செம்புலி, நன்டகோபன், பூலான், எழுவராயன் எனப்படும் 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் என்று அழைக்கப்படுபவர்களும், கிராம மக்களும் ஒன்று கூடினர். இவர்களின் முன்னிலையில் கோவில் பூசாரி சின்னத்தம்பி இந்த ஆண்டு விழாவிற்கு அம்மனாக வழிபடக் கூடிய 7 சிறுமிகளை பாரம்பரிய வழக்கப்படி தேர்வு செய்தார்.


அம்மன் தெய்வங்களாக அலங்கரித்து, தேர்வு செய்யப்படுவதற்காக கோவிலுக்கு வந்த சிறுமிகளை படத்தில் காணலாம்.

அம்மன் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கப்படும் தேர்வில் கலந்துகொள்ள 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் புத்தாடைகள் உடுத்தி அம்மன் தெய்வங்களைப் போல அலங்கரித்து பெற்றோர்களுடன் வந்திருந்தனர். இவர்களில் ஒரே வயது மற்றும் உயரம் உள்ள 7 சிறுமிகளை கோவில் பூசாரி தேர்வு செய்தார். பின்னர் அந்த சிறுமிகள் அனைவரும் கோவில் வீட்டுக்குள் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் திருவிழா முடியும் வரை, வீடுகளுக்கு செல்லாமல் வெள்ளலூர் கோவில் வீட்டிலே தங்கி, சுற்று பகுதி கிராமங்களுக்கு சென்று கிராம மக்களுக்கு ஆசி வழங்குவார்கள். அம்மன் தெய்வங்களான சிறுமிகளை வழிபடும் கிராமமக்கள், சிறுமிகளுக்கு பால், கோழிமுட்டைகள், இனிப்புகள் வழங்குவார்கள்.

நேற்றிலிருந்து 15 நாட்களுக்கு இந்த பகுதி மக்கள் பழமையான கட்டுப்பாடுகளுடன் கடும் விரதம் மேற்கொள்வார்கள். அவர்கள் அசைவ உணவு சமைக்காமலும், சமையலில் எண்ணெய்யை உபயோகிக்காமலும் இருப்பார்கள். இதையொட்டி கிராமங்களில் புரோட்டா கடைகள் மூடப்படும், வீடு கட்டுமான வேலைகள் நடக்காது, மரங்கள் வெட்டுவதில்லை. வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களும் இந்த விரத முறையை கடைபிடித்து வருகின்றனர்.

விரதமிருக்கும் பக்தர்கள் பலவிதங்களில் தங்களுடைய நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி வழிபடுவார்கள். ஆண்கள் இடுப்பில் உள்ளாடை மட்டும் அணிந்து, வைக்கோலை கயிறு போல திரித்து உடல் முழுக்க இறுக்கமாக சுற்றிக்கொண்டும், பலவிதமான உருவங்களில் முகமூடிகளை அணிந்து கோவில்பட்டியில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோவிலுக்கு நடந்து செல்வார்கள்.

பெண் பக்தர்களில் திருமணம் ஆகாதவர்கள் சிறிய மண் பொம்மைகளை சுமந்து வருவார்கள். திருமணமான பெண்கள் மண்கலையங்களில் பாலை ஊற்றி அதில் தென்னை மர குருத்துக்களை வைத்து அலங்கரித்து மதுக்கலயமாக சுமந்து வருவார்கள். இந்த ஊர்வலத்தில் பெரிய அம்பலகாரர் பாரம்பரிய வழக்கப்படி மாலை மரியாதைகளுடன் குடைபிடித்து அழைத்து செல்லப்படுவார். அதனை தொடர்ந்து 7 சிறுமிகளும் அம்மன்களாக அலங்கரிக்கப்பட்டு ஆசி வழங்கியபடி வருவார்கள்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !