7பேரையும் விடுவிக்க ஆளுனர் கையெழுத்திட வேண்டும் – அற்புதம்மாள்

கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுனர் கையெழுத்திட வேண்டுமென்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

கரூர் ஜவகர்பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “குற்றவாளிகள் தங்களது தண்டனை காலத்தில் குற்றத்தின் தன்மை அறிந்து மனம் திருந்த அமைக்கப்பட்டது தான் சிறைச்சாலை. மாறாக அவர்களை சித்ரவதை செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டதல்ல. சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளாக அந்த 7 பேரும் சிறையில் இருக்கின்றார்கள்.

அதே சட்டத்தின் மூலம் தமிழக ஆளுனர் கொலை குற்றவாளிகள் என கருதப்படும்  7 பேரையும் உடனே விடுதலை செய்ய கையெழுத்திட வேண்டும். ஆளுனர் கையெழுத்திடும் வரை எனது மக்கள் சந்திப்பு பயணம் தொடரும். அந்த 7 பேரும் விடுவிக்கப்பட்டு அறிவிப்பு வெளியான அடுத்த கனமே எனது பயணத்தை ரத்து செய்வேன்” எனக் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் நீண்ட காலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மாவட்டந்தோறும் சென்று மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !