4ம் திகதியே குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளது: ராஜித
குண்டுத்தாக்குதல்கள் சதித் திட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஈடுபடுகிறார்கள் என்ற எச்சரிக்கையை தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் விடுத்திருந்தும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தெரிவிக்கும் போது-
இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சற்று நேரத்திற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
நாட்டில் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கம் கவலையடைகின்றது. இவ்விடயம் தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகப் போவதில்லை. இந்தத் தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றது.
இத்தகைய தாக்குதல் சம்பவம் இடம்பெறப் போவதாக முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட, அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை குறித்து மிகுந்த கவலையடைவதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம்.
பாரிய சேதம் நிகழ்ந்து முடிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுப்போம் என்பதுடன், அரசாங்கத்தின் சார்பில் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றோம்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்னரே எச்சரிக்கை அனுப்பட்டுள்ளதாக தற்போது நாங்கள் அறிந்திருக்கின்றோம். அத்தகவல்கள் எவற்றையும் மறைக்காமல் பகிரங்கப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
பாரிய தாக்குதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடந்த 4 ஆம் திகதி சர்வதேச புலனாய்வுப் பிரிவொன்று அறிவுறுத்தியிருக்கின்றது. குண்டுத்தாக்குதல்கள் நடைபெறும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்களின் பெயர்களையும் உள்ளடக்கி, கடந்த 9 ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளருக்குப் பதிலாக தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பொலிமா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி பிரதிப் பொலிஸ்மாஅதிபர் இவ்விடயம் குறித்து அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், நீதியரசர்கள், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், ஓய்வூபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவில் மேலதிக பணிப்பாளர், இராஜதந்திரிகள் பாதுகாப்புப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இதில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும், பிரதமர் பாதுகாப்புப் பிரிவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் பாதுகாப்பு அமைச்சிற்கு ஜனாதிபதியே பொறுப்பானவர் என்பதால் அவரது பெயர் குறிப்பிடப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது தொடர்பில் எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இவ்விடயம் குறித்து எத்தகைய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கின்றது. தாக்குதல் குறித்து முன்னரேயே எமக்கு அனைத்து விபரங்களும் கிடைக்கப்பெற்றிருந்தும் கூட, அதனைத் தடுக்க முடியாமல் போயுள்ளது. முதலில் இது தொடர்பிலேயே விசாரிக்க வேண்டும்.
அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இவ்விடயம் பற்றி முழுமையாக ஆராய வேண்டும். தாக்குதல் இடம்பெறப் போவதாக யாருக்கு முன்னறிவித்தல் கிடைக்கப்பெற்றது? அவை பிரதமருக்கு நேற்று வரை அறிவிக்கப்படாதது ஏன்? பாதுகாப்பு அமைச்சினால் இவ்விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஊடகங்களில் இந்த முன்னெச்சரிக்கை வெளிவந்த பின்னரும் கூட நாங்கள் அது குறித்து அறியவில்லை என்பது ஆச்சரியமளிக்கின்றது. ஆனால் நேற்று இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றதிலிருந்து எம்மாலான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
இந்த தாக்குதல் உள்நாட்டைச் சேர்ந்த குழுவொன்றினால் மாத்திரம் நடத்தியிருக்க முடியாது. இத்தாக்குதலில் பின்னணியில் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட மிகப்பாரியதொரு தீவிரவாத வலைப்பின்னல் இருக்குமென்று கருதுகிறோம் என்றார்.