35 ஓட்டங்களால் தோல்வி – சொந்த மண்ணில் ஒருநாள் தொடரையும் இழந்தது!

இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்களால் தோல்வியடைந்து, ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.

இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரரில் முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், 5-வதும் இறுதியுமான போட்டி டெல்லியில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி 9 விக்கெட்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக உஷ்மான் கவாஜா 100 ஓட்டங்களையும் பீட்டர் ஹான்ட்ஸ்கொப் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்களையும், மொஹம்மட் சமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 273 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 237 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 35 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாடத்தில் ரோஹித் சர்மா 56 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுத்த புவனேஸ்வர் குமார் 46 ஓட்டங்களையும், கேதர் யாதவ் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில், அடம் சம்பா 3 விக்கெட்களையும், பெட் கம்மிங்க்ஸ்,  ரிச்சட்ஸ்சன், ஸ்டொய்னிஸ், ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்ரேலிய அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் சதம் பெற்று அணியின் வெற்றிக்கு பங்காற்றிய உஸ்மன் கவாஜா போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.

முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரை வெற்றி கொண்டிருந்த அவுஸ்ரேலிய அணி, ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !