3 வயது குழந்தையின் வாயில் வெடி வைத்த இளைஞன்!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தையின் வாயில் வெடி வைத்து அதனை வெடிக்க வைத்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது மிலாக் எனும் கிராமம். நேற்று தீபாவளியை ஒட்டி சசிகுமார் என்பவரின் 3 வயது பெண் குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த ஹர்பால் என்ற இளைஞன் குழந்தையின் வாயில் வெடியை வைத்ததோடு அதை பற்ற வைத்துள்ளார்.

பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்த நிலையில், அக்குழந்தை படுகாயம் அடைந்தது. உடனே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அக்குழந்தைக்கு 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. மேலும், தொண்டையில் நோய்த்தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை உள்ளது.

குழந்தையின் வாயில் வெடி வைத்த கொடூரன் தலைமறைவாகியுள்ளான். அவனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !