2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் – சஜித்
நான் பிரதமரானால் 2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில், ”இந்த நாட்டில் இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் ஒரு ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகவும், நடைமுறைப்படுத்துவதற்காகவும் என்னை அர்ப்பணித்து செயற்படுவேன்.
ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தினை தவறாக சொல்ல முடியாது. அவ்வாறு செயற்படுத்துவது தவறானது. எனது தந்தை ரணசிங்க பிரேமதாச இனங்களுக்கிடையில் புரிந்துணர்வோடு நடந்துகொள்ளுங்கள் என்பதனை சொல்லித்தந்துள்ளார்.
இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் ஒற்றுமையாக வாழ பழகுங்கள் இவ்வாறு இருந்தாலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியும். எனவே இந்த சிறிய நாட்டில் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழப்பழகிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சொல்லியிருக்கின்றார்.
எனவே நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது ஒற்றுமையாகவும் ,சந்தோசமாகவும் இனங்களுக்கிடையில் பிரிந்துவிடாமலும் பிளவுபட்டு விடாமலும் வாழ வேண்டும். அதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையும் கோட்பாடாகவும் உள்ளது.
நான்கு பேரைக்கொண்ட குடும்பத்திற்கு குறைந்தது இருபதனாயிரம் ரூபா அத்தியாவசிய தேவையாக உள்ளது. ஆகவே அதற்காக திட்டத்தினை மேற்கொண்டு வழங்க வேண்டும் என்ற சிந்தனையோடு நாங்கள் கடந்த காலத்தில் முயற்சித்திருந்தோம்.
ஆகவே ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நீங்கள் அளிக்கும் வாக்குகளினால் நாங்கள் நல்லாட்சி ஒன்றினை அமைத்து இருபத்தி நான்கு மணி நேரத்தில் மண்ணெண்ணை, பெற்றோல், டீசலில் விலையை குறைத்து அதனூடாக மக்களுக்கு வரப்பிரசாதத்தினை வழங்குவேன் என்பதனை கூறிக்கொள்கின்றேன்.
அத்துடன் வீடுகள் இல்லாத பிரச்சனைகளுக்காக கடந்த காலத்தில் நாங்கள் வீடுகளை அமைத்து கொண்டுத்திருந்தோம். அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் ஒட்டுமொத்த மக்களும் எமக்கான ஆதரவை தந்து நான் பிரதமராக வருகின்ற போது 2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன் சுயதொழில் மேற்கொள்ளும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் செயற்றிட்டத்தினை நாம் முன்னெடுப்போம். அத்துடன் மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்த பாரிய திட்டங்களை முன்னெடுப்போம். அத்துடன் சுயதொழில் முயற்சிகளை மேம்படுத்துவோம்” எனவும் தெரிவித்துள்ளார்.