2020 ஜனாதிபதி தேர்தல் – முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் ஹிலாரி கிளிண்டன்!

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.

அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஹிலாரி, ”நான் எதை நம்புகிறேனோ அதற்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன். அதுகுறித்துப் பேசுவேன்.

நாட்டில் இப்போது நடக்கும் சம்பவங்கள் என்னை மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றன. 2020 ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. ஆனால் அதற்காக எங்கும் போய்விட மாட்டேன்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாகப் போட்டியிட எண்ணுபவர்களிடம் பேசி வருகிறேன். ட்ரம்ப் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் நிறைவேற்றாத வாக்குறுதிகளின் பட்டியலே நீளமாக இருக்கிறது.

அதுகுறித்துப் பேசுங்கள் என்று கூறியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

1947-ஆம் ஆண்டு பிறந்த ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க அரசியலில் பிரபலமானவர். ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அமெரிக்க செனட் சபை உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில், ஒரு பெரிய அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வான முதல் பெண்மணியும் இவரே.

கடந்த 2016-ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்டார். தேர்தல் கணிப்புகள் ஹிலாரியின் பக்கம் இருந்தாலும் முடிவுகள் அவருக்கு எதிராக இருந்தன.

தேர்தலில் தோற்றாலும் தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன் என அவர் இதன்போது அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !