20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக மஹிந்த அணி சவால்!

20ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிலும், நாடாளுமன்றிலும் தோற்கடிப்போமென மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, குறித்த திருத்தச் சட்டமூலம் சட்டத்திற்கு முரணானதென்றும் முடிந்தால் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற்று காட்டுமாறும் குறித்த அணி சவால் விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா இவ்வாறு குறிப்பிட்டார்.

20ஆவது திருத்தச் சட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்தாலும், அதன் பின்னணியில் அரச சார்பற்ற நிறுவனங்களே உள்ளன என்ற குற்றச்சாட்டையும் ரஞ்சித் டி சொய்சா முன்வைத்தார். அதற்கு அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களான எம்.சுமந்திரன் மற்றும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் துணைபோகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய 20ஆவது திருத்தச் சட்டத்தை, மக்கள் விடுதலை முன்னணி கடந்த செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணையாக முன்வைத்தது. திருத்தச் சட்டமூலத்தின் பல சரத்துகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !