‘2.o’ திரைப்படம் வெளியீடு- பிரம்மாண்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

லைகா புரடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’ திரைப்படம், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ‘2.0’ திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை பார்த்து, ரசித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் சுமார் 625 திரையரங்குகளிலும் உலகம் முழுவதிலும் 10 ஆயிரம் திரையரங்குகளிலும் ‘2.O’ இத்திரைப்படம் வெளியானது. திரைப்படத்தின் முதல்காட்சிக்காக ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.

‘2.O’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து டுவிட்டரில் பல்வேறு ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

‘2.O’ திரைப்படத்தில் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். ரஜினிகாந்த் ரோபோ மற்றும் விஞ்ஞானி ஆகிய இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் 500 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட மிகப் பிரம்மாண்ட திரைப்படம் இதுவாகும்.  மிக அதிகப்படியான தொழில்நுட்பங்களும், ஹொலிவுட் தரத்துக்கு நிகரான வேலைப்பாடுகளும் இந்த திரைப்படத்தை மேலும் மெருகூட்டியுள்ளது.

பொதுவாக ஷங்கர் இயக்கும் எந்த திரைப்படத்திலும் பிரம்மாண்டமான விடயங்கள் இடம்பெற்றிருக்கும். ரஜினியை வைத்து இயக்கியுள்ள ஷங்கரின் கனவு திரைப்படமான ‘2.O’இல் மிக அதிகப்படியான பிரம்மாண்டமான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இன்று அதிகாலையிலேயே திரையரங்குகளின் வாசலில் ரசிகர்கள்  குவிந்துள்ளனர். ‘ 2.O’  முதல் காட்சி அதிகாலை வெளியானது. இலங்கையை பொறுத்தவரையில், தலைநகரின் முக்கிய திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகின்றது. அத்தோடு, தமிழகத்தில் மதுரை, சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ‘2.O’  திரைப்படத்தை பார்த்து ஆர்ப்பரிப்புடன் ரசித்து வருகின்றார்கள். தமிழகம் முழுவதும் திரையரங்குகள் அனைத்தும் இன்று திருவிழா கொண்டாட்டமாக மாறியுள்ளது.

குறிப்பாக தமிழகத்தின பல திரையரங்குகளுக்கு முன்னால் குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், நடனம் ஆடியும், பாலாபிஷேகம் செய்தும் முதற்காட்சியை ஆரம்பித்து வைத்தனர். இவ்வாறு ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் ஈடுபட்டு வருவதோடு, படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளதென மகிழ்ச்சியுடன் கருத்துப்பதிவு செய்து வருகின்றனர்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !