‘2.O’ திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை !

லைகா புரடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’ திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.  மூவாயிரம் இணையதளங்களுக்கு இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ‘2.O’ திரைப்படம்  நாளை (வியாழக்கிழமை) உலகளாவிய ரீதியில் மிகப் பிரம்மாண்டமாக திரைக்கு வருகின்றது.

லைகா புரடக்ஷனில் பலநூறு கோடி ரூபாய் பொருட்செலவில், மிகப்பெரும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரைப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் ‘2.O’ திரைப்படம் முறைகேடாக இணையதளத்தில் வெளியிடப்பட்டால் பாரிய நட்டம் ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே முறைகேடாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிடக் கூடாதென உத்தரவிட வேண்டும் என லைகா நிறுவனம் நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கமைய வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், ‘2.O’ திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மூவாயிரம் இணையதளங்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !