2 மில்லியன் மக்களில் தொற்றியது கொரோனா வைரஸ்: பல நாடுகளில் மோசமான விளைவு!
உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து கடும் பாதிப்புக்களையே ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் பரவல் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேரை மாய்த்து அந்நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளமை இதுவரை கண்டிறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 981 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 708 பேர் இதுவரையான காலப்பகுதியில் மரணித்துள்ளனர். மேலும், 4 இலட்சத்து 78 ஆயிரத்து 932 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸின் தீவிரப் பிடிக்குள் சிக்கியுள்ள அமெரிக்காவில் புதிய நோயாளர்கள் 26 ஆயிரத்து 945 பேர் நேற்று மட்டும் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 6 இலட்சத்து 13 ஆயிரத்து 886 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் உலக அளவில் கொரோனாவால் பெரும் மனித இழப்பு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 26 ஆயிரத்து 945 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் 6 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள போதும் இதுவரை குணமடைந்தோர் 38 ஆயிரத்து 820 ஆகக் காணப்படுகிறது.
அமெரிக்காவில் நியூயோர்க் மாநிலமே பெருந்தொற்றால் உறைந்துபோயுள்ளதுடன் அங்கு நேற்று மட்டும் 778 பேர் மரணித்துள்ளனர். அத்துடன் ஏனைய உலக நாடுகளை விட நியூயோர்க்கில் அதிகம்பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இதுவரை அங்கு 2 இலட்சத்து 3 ஆயிரத்து 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 ஆயிரத்து 834 பேரின் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதனைவிட, நியூஜெர்ஸி மாகாணத்தில் நேற்றுமட்டும் 362 பேர் மரணித்துள்ள நிலையில் அங்கு 68 ஆயிரத்து 824 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பு 2 ஆயிரத்து 805 ஆகப் பதிவாகியது.
இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் வைரஸின் தீவிரம் குறையாத நிலையில் அந்நாடுகளில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 728 பேர் மரணித்துள்ளனர்.
அத்துடன், அந்நாடுகளில் நேற்று 29 ஆயிரத்து 902 புதிய வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்தமாக ஐரோப்பாவில் 9 இலட்சத்து 37 ஆயிரத்து 288 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், அந்நாடுகளில் இதுவரை 83 ஆயிரத்து 717 பேர் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.
இதில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் நேற்றும் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
அந்தவகையில், இத்தாலியில் நேற்று ஒரேநாளில் மாத்திரம் 602 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 21 ஆயிரத்து 67ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 488 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் அவர்களில் 37 ஆயிரத்து 130 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, மிகமோசமாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு நாடான ஸ்பெயினில் நேற்று மட்டும் 499 பேர் மரணித்துள்ளனர்.
அத்துடன், மொத்தமாக 18 ஆயிரத்து 255 பேர் அங்கு உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 60 பேர் பாதிகப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. இதேவேளை, குணமடைந்து வெளியேறுவோர் அந்நாட்டில் கணிசமாக உள்ள நிலையில் இதுவரை 67 ஆயிரத்து 504 பேர் தொற்றிலிருந்து விடுதலையாகியுள்ளமை பதிவாகியுள்ளது.
இதனைவிட, மற்றொரு ஐரோப்பிய நாடான பிரான்ஸில் நேற்று ஒரேநாளில் 762 பேர் மரணித்துள்ளதுடன் நேற்று மட்டும் 6 ஆயிரத்து 524 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 303 பேராக பாதிப்பு அதிகரித்துள்ளது.
மேலும், அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு 15 ஆயிரத்து 729 ஆகப் பதிவாகியுள்ளதுடன் 28 ஆயிரத்து 805 பேர் குணமடைந்துள்ளமை பதிவாகியுள்ளது.
இதனைவிட, பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா தொற்று நேற்று மட்டும் 778 பேரின் உயிரை மாய்த்துள்ளது.
அத்துடன் அங்கு மொத்தமாக 12 ஆயிரத்து 107 பேர் மரணித்துள்ளதுடன் நேற்று 5 ஆயிரத்து 252 பேருக்கு தொற்று அறியப்பட்டு மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 873 ஆக அதிகரித்துள்ளது.
இதனைவிட ஜேர்மனியில் நேற்று அதிகபட்சமாக 301 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 68 ஆயிரத்து 200 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமை சற்று ஆறுதல் அளித்துள்ளது.
அதேவேளை, இன்னொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நேற்று 254 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரழப்பு 4 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நெதர்லாந்தில் நேற்று மட்டும் 122 பேர் மரணித்துள்ளதுடன், சுவீடனில் 114 பேரும், சுவிற்சர்லாந்தில் 36 பேரும், போர்த்துக்கலில் 32 பேரும் நேற்று மரணித்துள்ளதுடன் ரஷ்யாவில் அதிகபட்சமான நேற்று 22 பேர் மரணித்துள்ளனர்.
இதேவேளை, அமெரிக்க நாடான கனடாவில் நேற்று அதிகபட்சமாக 123 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 903 ஆகக் காணப்படுகிறது.
அங்கும் கொரோனா வைரஸ் தீவிரப் போக்கை ஆரம்பித்துள்ள நிலையில் நேற்று அதிகபட்ச உயிரிழப்பு அந்நாட்டில் பாதிவாகியுள்ளதுடன் மொத்தமாக 27 ஆயிரத்து 63 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைவிட மெக்ஸிகோவில் நேற்று மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பிரேஸிலில் அதிகபட்ச உயிரிழப்பாக நேற்று 204 பேர் மரணித்துள்ள நிலையில் அங்கு மொத்தமாக ஆயிரத்து 532 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 25 ஆயிரத்து 262 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆசியாவில் நேற்று மொத்தமாக 373 பேர் மரணித்துள்ள நிலையில் ஈரானில் அதிகபட்ச உயிரிழப்பாக 107பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் அங்கு மொத்தமாக 74 ஆயிரத்து 877 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 48 ஆயிரத்து 129 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவில் 35 பேர் நேற்று மட்டும் மரணித்துள்ளதுடன் அங்கு இதுவரை மொத்தமாக 11 ஆயிரத்து 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
இதனைவிட, இந்தோனேஸியாவில் நேற்று மட்டும் 60 பேர் மரணித்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸில் 20 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இதேவேளை, வைரஸ் தோற்றம்பெற்ற சீனாவில் நேற்று 89 பேருக்கு வைரஸ் தொற்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.
சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 3 ஆயிரத்து 341 பேரின் உயிரிழப்பு பதிவாகிய நிலையில் 77 ஆயிரத்து 738 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை பதிவாகியுள்ளது.