144 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெறும் மகா புஷ்கர விழா சிறப்பாக ஆரம்பம்!

144 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெறும் மகா புஷ்கர விழா இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. இதனையடுத்து படித்துறைகளில் பெருந்திரளான மக்கள் புனித நீராடி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

அகில பாரதீய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசம் படித்துறையில் இன்று அதிகாலை தாமிரபரணி புஷ்கர விழா ஆரம்பமானது. இதையொட்டி சங்கராசாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், சாதுக்கள், துறவியர்கள் கலந்து கொண்டு 108 புண்ணிய நதி கலச தீர்த்தங்களை தாமிரபரணி ஆற்றில் கலந்தனர்.

இதைத்தொடர்ந்து சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தாமிரபரணி நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பாபநாசம், அம்பை, சேரன்மகாதேவி, சுத்தமல்லி, குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை, தைப்பூச மண்டபம், முறப்பநாடு, ஸ்ரீவை குண்டம், ஏரல் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

144 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மகா புஷ்கர இது விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகா புஷ்கர விழா இன்று முதல் தெிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இதற்காக தாமிரபரணி நதி தொடங்கும் பொதிகை மலையின் பூங்குளத்தில் இருந்து இறுதியாக கடலில் சென்று கலக்கும் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகளில் புஷ்கர விழா கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த புஷ்கர விழாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்கர விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு ஆரத்தி, மாநாடுகள், கலைநிகழ்ச்சிகள், அன்னதானம், பொங்கலிடுதல், சிறப்பு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், தென்திருப்புவனம், சேரன் மகாதேவி, மேலச்செவல், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், வண்ணார் பேட்டை, எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயுதீர்த்தம், சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் உள்ளிட்ட பகுதிகளிலும் தாமிரபரணிக்கு மஹா ஆரத்தி வழிபாடுகள் நடைபெறுகின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !