Main Menu

மாலத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 9 இந்தியர்கள் பலி

மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இந்த கட்டத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள வாகன பழுது பார்க்கும் கடையில் முதலில் தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சிறிது நேரத்தில் அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. பெரும் கரும்புகை வெளியேறியது. அந்த சமயத்தில் கட்டிடத்தில் தங்கி இருந்தவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். தீப்பிடித்து புகை மூட்டம் நிலவுவதை அறிந்ததும் அலறியடித்தபடி எழுந்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் அவர்களால் கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து வெளியேற முடியவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் கடுமையாக போராட வேண்டி இருந்தது. சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 10 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். பலியானவர்கள் யார், யார் என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பலியானவர்களில் 9 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது. ஒருவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் ஆவார். உயிரிழந்த 9 இந்தியர்களின் முழு விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. அவர்களது விவரங்களை இந்திய வெளியுறவுத்துறை சேகரித்து வருகிறது. இந்த தீவிபத்து தொடர்பாக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் “மாலேயில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததால் கவலை அடைந்துள்ளோம். மாலத்தீவு நிர்வாகத் தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. மேலும் அவசர உதவி எண்ணையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

பகிரவும்...