Main Menu

மத்திய பாஜக அரசு ஏழைகளுக்கானது: அவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம்- பிரதமர் மோடி

தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள கல்காஜியில் குடிசைவாழ் மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் புதிதாக 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. விக்யாபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதை திறந்து வைத்த பிரதமர் மோடி, பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: டெல்லியை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இந்நாள் மிகப் பெரிய நாள். ஏழை குடிசைவாழ் குடும்பத்தினருக்கு இது புதிய தொடக்கம். கல்காஜி விரிவாக்கத் திட்டத்தில் மட்டும் முதல் கட்டமாக 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மிக விரைவில் மற்ற குடும்பங்களும் புதிய வீடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  டெல்லி போன்ற பெரிய நகரங்களில் வளர்ச்சி ஏழை மக்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளால் ஏற்பட்டது. ஆனால் அதற்கு முரண்பாடாக ஏழை மக்களின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. ஒரு நகரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும்போது, ​​முழுமையான வளர்ச்சியை யாரால் எண்ணிப்பார்க்க முடியும். விடுதலைப் பெருவிழாக் காலத்தில் இந்தப் பெரிய இடைவெளியை நாம் நிரப்ப வேண்டும். அதனால் தான் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்ற வழியில் நாடு செல்கிறது. இன்றைய அரசு ஏழைகளுக்கானது. கொள்கை உருவாக்கம் மற்றும் முடிவெடுக்கும் முறைகளில் ஏழைகள் பிரதானமாக இருக்கிறார்கள். நகர்ப்புற ஏழைகளின் பிரச்சினைகளுக்கு அரசு சமமான முக்கியத்துவம் கொடுக்கிறது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள சாலையோர வியாபாரிகள் உட்பட ஏழை மக்களுக்கு நேரடி பலன் கிடைத்தது. ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 50,000-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் நிதியுதவி பெற்றனர். ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் டெல்லியில் உள்ள ஏழைகள் எளிதாக வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்து வருகிறது. பெருந்தொற்று நோய் பரவலின் போது ஏழை மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தகுதியுடைய லட்சக்கணக்கான மக்கள் மத்திய அரசிடமிருந்து இலவச ரேஷன் பொருட்கள் பெற்று வருகின்றனர். டெல்லியில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு காப்பீட்டு பாதுகாப்பு கிடைத்துள்ளது. மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம் மருந்துச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளது. ​​உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகிரவும்...