Main Menu

மஞ்சள் இறக்குமதி தடையை நீக்குமாறு இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்- ராமதாஸ்

மஞ்சள் இறக்குமதி தடையை நீக்குமாறு, இலங்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி வாய்ப்புகள் குறைந்ததையடுத்து, ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால் மஞ்சள் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் ஏற்றுமதிக்கு புத்துயிரூட்டி, உழவர்களின் கவலையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

இந்திய மஞ்சளுக்கு மருத்துவத் தன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பதால், அதற்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு உள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற மஞ்சள் சந்தையாக ஈரோடு திகழ்வதால், தமிழகத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மஞ்சள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம் ஆகும்.

மேலும் ஈரோடு, சேலம் மாவட்ட மஞ்சள் உழவர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்காக முதன்முதலில் குரல் கொடுப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்றுமதி குறைந்திருப்பது மஞ்சள் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றாலும் கூட, இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தான் விற்பனை குறைவுக்கும் விலை வீழ்ச்சிக்கும் முதன்மைக் காரணம்.

ஈரோடு பகுதியில் விளைவிக்கப்படும் மஞ்சளின் பெரும்பகுதி இலங்கைக்கு தான் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

ஆனால், மஞ்சள் உற்பத்தியில் தற்சார்பு அடைய வேண்டும் என்பதற்காக இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டிலிருந்தும் மஞ்சள் இறக்குமதி செய்ய இலங்கை தடை விதித்திருக்கிறது.

அதனால், இலங்கைக்கான மஞ்சள் ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியது தான் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இலங்கையின் இந்த முடிவு யாருக்கும் நன்மை பயக்கவில்லை. மாறாக, இரு தரப்புக்கும் பாதிப்புகளே ஏற்பட்டிருக்கின்றன. ஒருபுறம் ஈரோட்டு சந்தையில் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மறுபுறம் இலங்கையில் மஞ்சளின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

மேலும், மஞ்சள் மற்றும் தங்கக் கடத்தல்காரர்கள் மட்டும் தான் இந்தத் தடையால் பயனடைந்துள்ளனர்.  எனவே குறித்த  தடை நீக்கப்பட்டால், இலங்கையில் மஞ்சளின் விலை எட்டில் ஒரு பங்காக குறையும்.

எனவே,இந்த விடயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...