ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு : எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை?
சர்வதேசத்தினால் எதிர்பார்க்கப்பட்ட ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு முடிவடைந்துள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்காவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையில் போர் நிறுத்தம் தொடர்பான இணக்கமும் ஏற்படவில்லை.
எனினும், விளாடிமிர் புட்டினுடனான, யுக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தானும் புட்டினும் ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பை நடத்தியதாகவும், அதில் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேட்டோ கூட்டாளிகள் மற்றும் யுக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி உட்பட்டவர்கள், பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், இறுதி உடன்படிக்கைக்கு இணங்கவேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் உண்மையான ஆர்வம் இருப்பதாக புட்டின் கூறியுள்ளார்.
மீண்டும் தமக்கிடையிலான ஒரு சந்திப்பு விரைவில் இடம்பெறும் என்றும் அது மொஸ்கோவில் இடம்பெறும் என்றும் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரேனியர்களும் ஐரோப்பியர்களும் சமாதான முன்னெடுப்புகளில் தலையிட மாட்டார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ட்ரம்ப் தனது நாட்டின் செழிப்பில் தெளிவாக அக்கறை கொண்டுள்ளார்.
ரஷ்யாவுக்கு அதன் சொந்த நலன்கள் இருப்பதைப் புரிந்துகொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலுக்கான முதன்மைக் காரணங்களை அகற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் ரஷ்யாவும் கடலால் பிரிக்கப்பட்டிருந்தாலும், நெருங்கிய அண்டை நாடுகள் என்று புட்டின் கூறியுள்ளார்.
1800 களின் நடுப்பகுதியில் அமெரிக்காவிற்கு விற்கப்படுவதற்கு முன்னர் சந்திப்பு இடம்பெற்ற அலாஸ்கா, ரஷ்யாவின் ஒரு பிரதேசமாக இருந்தது என்பதை புட்டின் நினைவுபடுத்தியுள்ளார்.
சந்திப்பின் பின்னர் இரண்டு ஜனாதிபதிகளும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
