Main Menu

ஜம்மு- காஷ்மீர் விவகாரம்: ஐ.நா அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம்

ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளுக்கான, ஐ.நா.துாதரக அலுவலகத்தின் இணைய தளத்தில், ஜம்மு- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

குறித்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாவது, ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, இந்தியா தன்னிச்சையாக இரத்து செய்து, புதிய சட்டங்களை அமுல்படுத்தி உள்ளது.

இதனால் அங்கு, முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர், அரசியலில் பங்கேற்பது குறைந்துவிட்டது” என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த அறிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஸ்ரீ வஸ்தவா, நேற்று (வெள்ளிக்கிழமை) கூறியதாவது, “ஜம்மு-காஷ்மீருக்கு, பல நாடுகளின் துாதர்கள் சமீபத்தில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வை சீர்குலைக்கும் நோக்கில்தான், இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜம்மு- காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்து விட்டு, அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, பார்லிமென்ட் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்டதை, அறிக்கை வெளியிட்டவர்கள் மறந்து உள்ளனர். பாரபட்சமான இந்த அறிக்கைகளை இந்தியா நிராகரிக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...