Main Menu

சுனாமி ஆழிப்பேரலை தாக்கியதின் 13ம் ஆண்டு நினைவு தினம்..!

கடல்க்கரையில் அந்த கல்லறைகளை என்றும் நினைவு கூறுவோம் ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்..

கோயில்குளம் கண்டதில்லை
கோபுரங்கள் வணங்கவில்லை
கோலக் கடத்தாயே – உனை
கொஞ்சமா வணங்கி நின்றோம்?
கொஞ்சவந்த பிள்ளையிடம் – ஏன்
கோரமுகம் காட்டிவிட்டாய்?

விதைத்தது விளைந்தது மற்றும்
வளர்ந்ததையும் கொண்டுசென்று
புதைக்கவும் மனமின்றி – ஏன்
வழியெல்லாம் இறைத்துவிட்டாய்?
கதைக்கின்றேன் கடல்த்தாயே – உனைவிட
சிசுக்கொலையும் சிறந்ததடி.

நாளும் உன்வீடு வந்தோம்
வளம்பல அள்ளிவந்தோம்
தாய்வீட்டு சீதனம் இதுவென – நாம்
மார்தட்டி கொண்டுவந்தோம்
திடுடனென நினைத்தாயோ – எமை?
வாளேந்தி வந்துவிட்டாய் வாசலுக்கே!

பச்சைரத்தம் வேண்டுமென்று என்காதில்
பக்குவமாய்ச் சொல்லிவிட்டால்
பாவியென் கழுத்தறுத்து – தேவி
பலியுடனே படையல் வைப்பேன்
நெற்பயிரில் யானையென – நீ
மேற்கே கிழக்காய் பேயாடிவிட்டாயே!

வஞ்சமில்லா பிஞ்சுகளும் உன்மடியில் அவை
கட்டிய மணற்கோட்டைகளும்
வாஞ்சையுடன் ஆயிரமாய் மக்கள்பலர் – அவர்
கட்டிய மனக்கோட்டைகளும்
பூஞ்சைபடிந்த உன்வயிற்றில் – சிக்கி
அழுகித்தான் போனதுவோ?

கரம்பிடித்த மனையெங்கே பயத்தில்
கால்பிடித்த பிள்ளையெங்கே?
பிள்ளையின் இறுதிமுகம் பார்க்கவும் வழியின்றி
உயிர்விடும் அவலம் இங்கே
கடல்தாயே ஒன்றுசொல்வேன் உண்மை – இன்று
நான் அனாதைப் பிணமல்ல..

என்னுடன் ஆயிரமாய் மேலும் கீழும்
பிணக்குவியல்கள்……..

தாண்டவம் ஆடிவிட்டு – இங்கு
அமைதியாய் தவழ்கிறேன் என்றே
கண்டிடும் மாந்தரெல்லாம் – எனை
வெறுப்புடனே முறைக்கின்றார்

கண்ணீர் வந்தால்கூட – பாவி
கடல்மட்டம் உயருமென்றே
தொண்டைக் குழியிலே – என்
துக்கமெல்லாம் கொட்டிவைத்து
அடிமனதில் அழும்சத்தம் – அங்கு
யாருக்கும் கேட்கலியா?

தடுக்கி விழுந்தேனென – தலையடித்து
கதறிடும் ஓர்சத்தம்
சத்திய வார்த்தைகளாய் – உன்காதில்
சங்கொலியாய்க் கேட்கலியா?

ஓருயிரை பறிகொடுத்தால்
உயிர்விடும் தாயொருத்தி
ஆயிரமாய் பலிகொண்டால்
அடுத்தகணம் தீக்குளிப்பாள்
அடிவயிற்றில் உள்ள உயிர்
ஆயிரங்கள் கோடியம்மா..

பாவம்தீர இந்தத்தாயும்
எப்படித்தான் தீக்குளிப்பாள்??!!

பகிரவும்...