ஏப்ரல் 21 தாக்குதல் – ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திக்கான் முழுமையான ஆதரவு
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நீதி மற்றும் நியாயம் கிடைப்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொண்டுள்ள தொடர் முயற்சிகளுக்கு வத்திக்கான் முழுமையான ஆதரவை வழங்குவதாக இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியை இன்றைய தினம் (09) நேரில் சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் இறைமைமிக்க வத்திக்கான் அரசின் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் வழங்கிய வாழ்த்து செய்தியையும் அவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு மிகவும் விரும்பத்தகாத அனுபவமாக அமைந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்துள்ள முயற்சிகளை இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பகிரவும்...
