Main Menu

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்பானது எதிர்காலத்தில் கூட தாக்கத்தை செலுத்தும் – மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்பானது, நாட்டில் எதிர்க்காலத்தில் ஆட்சிக்கு வரவுள்ள ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்தில் கூட தாக்கத்தை செலுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பேசப்படுகிறது.

2009 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு ஜனாதிபதியின் காலத்திலும் நாட்டில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன.

ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அன்று உயிரிழந்தார்கள்.

ஆனால், நாம் அன்று நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளை குற்றஞ்சாட்டவில்லை.

எனினும், இன்று அனைத்துத் தரப்பினரும் ஈஸ்டர் தாக்குதலை அடுத்து என்னை சிறைக்குள் தள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.

2015, 2016, 2017 காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இவ்வாறான நிலைமை எமது நாட்டுக்குள் வர, ஒருபோதும் இடமளிக்க வேண்டாம் என 2015 இலிருந்து, நான் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களின்போது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தேன்.

உரிய ஆலோசனைகளை வழங்கியிருந்தேன். பாதுகாப்புச் சபையானது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு – மூன்று வருடங்களிலேயே இது கலைக்கப்பட்ட நிலையில், நான் ஒரு சம்பிரதாயப்பூர்வமாகத் தான் இதனை தொடர்ச்சியாக கூட்டிவந்திருந்தேன்.

2010 – 2015 வரையான காலப்பகுதியில்கூட தேவைக்கேற்ப தான் பாதுகாப்புச்சபை கூட்டப்பட்டது. ஆனால் நான் தான் மாதத்திற்கு ஒருதடவை இதனைக் கூட்டினேன்.

2019, ஏப்ரல் 9ஆம் திகதிகூட, பாதுகாப்புச்சபை கூட்டப்பட்டபோது குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதானி, பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வருகைத் தந்திருந்தார்கள்.

இதன்போது எந்தவொரு அதிகாரியும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறும் என்று கிடைத்த புலனாய்வுத் தகவல் குறித்து எனக்கு தெரியப்படுத்தவில்லை.

ஆனால், நான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறேன். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரியொருவரால் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால்தான், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் உள்ளது.

இது நஷ்ட ஈடே ஒழிய, அபராதம் கிடையாது. ஆனால், இந்த நஷ்டஈட்டை வழங்கும் அளவிற்கு என்னிடம் சொத்துக்கள் கிடையாது.

எனினும், எனக்கு நெருக்கமானவர்களிடம் இந்தத் தொகையை பெற்று அந்த நஷ்டஈட்டை வழங்க தீர்மானித்துள்ளேன்.

இந்த வழக்கின் தீர்ப்பானது நாட்டில் எதிர்க்காலத்தில் வரவுள்ள ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்திலும் தாக்கம் செலுத்தும்.

அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறிழைத்தால்கூட, அவர்கள் இன்று எனது நிலைமைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...