Main Menu

13 அம்ச ஆவணத்தை முன்னிறுத்தி தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாரில்லை – கோத்தாபய ராஜபக்ச

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பேசுவதற்காக ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து, 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை தயாரித்துள்ள நிலையில், பிரதான வேட்பாளர்கள் எவரும், பேச்சுக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களின் அபிலாசைகள், பிரச்சினைகளை உள்ளடக்கிய 13 அம்ச ஆவணத்தை முன்னிறுத்தியே அதிபர் வேட்பாளர்களுடன் பேசுவோம் என்று ஐந்து தமிழ்க் கட்சிகளும் கூட்டாக அறிவித்திருந்தன.

எனினும், இந்த ஆவணத்துடன் வந்தால் தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாரில்லை என்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு கூறியிருந்தார்.

அத்துடன், மகிந்த ராஜபக்சவும், தமிழ்க் கட்சிகளின் இந்த கோரிக்கைகள் ஆபத்தானவை என்றும், இதனை முன்னிறுத்தி பேச முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த ஆவணத்துக்கு சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள இனவாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச இந்த ஆவணத்தை நிராகரிக்காவிடினும், பேச்சு நடத்துவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.

ஆயினும் அவர் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் அவரும் இந்த ஆவணத்தை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்த ஆவணத்தை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளரை சிங்கள மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று பௌத்த பிக்குகளும், இனவாத அமைப்புகளும் கோரி வரும் நிலையில்- எந்தவொரு அதிபர் வேட்பாளரும் தமிழ்க் கட்சிகளின் 13 ஆம்ச ஆவணத்தை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று  தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமது கோரிக்கைகளை நிராகரித்துள்ள கோத்தாபய ராஜபக்சவுடன் பேசத் தயாரில்லை என்று கூறியுள்ளார்.

பிரதான அதிபர் வேட்பாளர்கள் எவரிடத்தில் இருந்தும் சாதகமான சமிக்ஞைகள் வராத நிலையில், தமிழ்க் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் சில நாட்களில் தீர்மானிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தவாரம் ஐந்து கட்சிகளும் கூடி அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

பகிரவும்...