ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர்: காலிறுதி போட்டிகளின் முடிவுகள்

ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

8 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில், ஏ, பி என இரண்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆண் வீரர் ஒருவரும், பெண் வீராங்கனை ஒருவரும் ஒரு நாடுக்காக விளையாடுவர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெறும்.

இத்தொடரில் நாடுகளுக்கிடையிலேயே வெற்றி பார்க்கப்படுவதால், வீரர், வீராங்கனைகள் இதில் அதிகம் ஆர்வமாக விளையாடுகின்றனர்.

29 ஆண்டுகளாக நடைபெறும் இத்தொடர், கடின தரையில் நடைபெறும் தொடராகும். இத்தொடரின் போட்டிகள் கிரவுண் பெர்த் மற்றும் பெர்த் எரினா விளையாட்டரங்குகளில் நடைபெறுகின்றன.

சரி வாருங்கள் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்…

ஏ குழுவில் நடைபெற்ற போட்டியில் ஜேர்மனி அணியும், பிரான்ஸ் அணிகளும் மோதின.

இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்வும், பிரான்ஸின் லூகாஸ் பியூலியும்  பலப்பரீட்சை நடத்தினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், 6-3 என கைப்பற்றினார்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், லூகாஸ் பியூலி, அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்வுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட் டை பிரேக் வரை நீடித்தது.

இதில் கடுமையாக போராடி லூகாஸ் பியூலி, செட்டை 7-6 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டினை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது. இதில் 6-2 என அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் எளிதாக வெற்றிபெற்றார்.
…………………

ஏ குழுவில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும், பிரான்ஸின் அலிஸ் கோர்னெட்டும்  மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டிலேயே முன்னணி வீராங்கனையான ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், செட்டை 7-5 என அலிஸ் கோர்னெட்டிடம் இழந்தார்.

இதனையடுத்து மீண்டெழுந்த ஏஞ்சலிக் கெர்பர், அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-2, 6-4 என்ற செட் கணக்குகளில் கைப்பற்றி வெற்றிபெற்றார்.
…………………
ஏ குழுவில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்- ஏஞ்சலிக் கெர்பர் ஜோடியும், பிரான்ஸின் லூகாஸ் பியூலி- அலிஸ் கோர்னெட் ஜோடியும் மோதின.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றது.

இரண்டு செட்டுகளுமே டை பிரேக் வரை நீடிக்க, 4-3, 4-3 என்ற செட் கணக்குகளில் ஜேர்மனி அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜேர்மனி அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.
………….
ஏ குழுவில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், அவுஸ்ரேலியா அணியும், ஸ்பெயின் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியொன்றில், அவுஸ்ரேலியாவின் மத்தேயு எப்டெனும், ஸ்பெயினின் டேவிட் பெரரும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே டை பிரேக் வரை நகர்ந்தது. இதில் கடுமையாக போராடி டேவிட் பெரர் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய டேவிட் பெரர், செட்டை 7-5 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.
………………..
ஏ குழுவில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், ஸ்பெயின் கர்பின் முகுருசாவும்  அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஷ்லே பார்டி, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்றார்.
………………….

ஏ குழுவில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில், அவுஸ்ரேலியாவின் மத்தேயு எப்டென்- ஆஷ்லே பார்டி ஜோடியும், ஸ்பெயினின் டேவிட் பெரர்- கர்பின் முகுருசா ஜோடியும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே டை பிரேக் வரை நகர்ந்தது. இதில் ஸ்பெயினின் ஜோடி 4-3 என வெற்றிபெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், அவுஸ்ரேலியா ஜோடி 4-3 என வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.

விறுவிறுப்படைந்த மூன்றாவது செட் டை பிரேக் வரை நீண்டது. இதில் கடுமையாக போராடி 4-3 என அவுஸ்ரேலியா ஜோடி வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இதன் மூலம் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியா அணி, ஜேர்மனி அணியை எதிர்கொள்ளவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !