ஹோப்மன் கிண்ணம் மீண்டும் சுவிற்ஸர்லாந்து வசம்

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுவந்த ஹோப்மன் கிண்ண போட்டிகளில் சுவிற்ஸர்லாந்து அணி வெற்றிபெற்று கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது.

இம்முறை 2019ம் ஆண்டிற்கான போட்டிகளின் இறுதியாட்டத்தில் விளையாட சுவிற்ஸர்லாந்தும் ஜேர்மனியும் தகுதிபெற்றிருந்தன.நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2-1 என்ற போட்டிகள் கணக்கில் சுவிற்ஸர்லாந்து அணி வெற்றிபெற்றது. 2018ம் ஆண்டிலும் சுவிற்ஸர்லாந்து அணியே சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் போட்டி ,மகளிர் ஒற்றையர் போட்டி மற்றும் கலப்பு இரட்டையர் போட்டி என மூன்று போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரொஜர் பெடரர் 6ற்கு4 6ற்கு2 என்ற நேர் செட்களில் ஜேர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வரோவைத் தோற்கடித்தார். மகளிர் ஒற்றையர் போட்டியில் ஜேர்மனிய வீராங்கனை ஆங் கேர்பர் 6ற்கு4 7ற்கு6 என்ற நேர் செட்களில் சுவிற்ஸர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்ஸிக்கைத் தோற்கடித்தார்.

ஒற்றையர் போட்டிகளில் மாறிமாறி சுவிற்ஸர்லாந்தும் ஜேர்மனியும் வெற்றிபெற்ற நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கலப்பு இரட்டையர் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் ,பெலின்டா பென்ஸிக் ஜோடி 4ற்கு 0 1ற்கு 4 4ற்கு3 என மூன்று செட்களில் ஸ்வரோவ் மற்றும் கேர்பர் ஜோடியை தோற்கடித்தது.

இதன் மூலம் ஹோப்மன் கிண்ண வரலாற்றில் (1992, 2001, 2018 ,2019) நான்காவது தடவையாக சுவிற்ஸர்லாந்து சம்பியனாகியது .

எட்டு நாடுகளின் அணிகள் மோதும் இந்தப் போட்டிகள் முன்னாள் அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் ஹரி கோப்மனை கௌரவிக்கும் வகையில் 1989ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றன.  அதிகப்படியாக ஆறுதடவைகள் அமெரிக்கா சம்பியன் பட்டத்தை சூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !