ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம்
சீன அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஹொங்கொங் பிரஜைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“அமைதியான போராட்டத்தின்” ஒரு பகுதியாக, ஜோர்டானில் இருந்து கவுலூன் மாவட்டத்தில் மோங் கோக்கிற்கு கூட்டம் சென்றபோது, கேடயங்களுடன் ஆயுதமேந்திய கலகப் பிரிவு பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது வழக்கம்போல ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இதன் போது மோங் கோக்கில் வன்முறைகள் வெடித்தன என்றும் அதனை அடக்க பெப்பர் ஸ்பிரே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்மொழியப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டங்களை தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழு ஞாயிற்றுக்கிழமை மதிப்பாய்வு செய்தது. ஜூன் இறுதிக்குள் சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில் குறித்த வரைவு இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.