Main Menu

ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவம் : விசாரணைகளை ஆரம்பித்தது நீதி மன்றம்!

ஹைதராபாத் என்கவுண்டரில் குற்றம் நடந்திருந்தால் தவறுக்குப் பொறுப்பான அதிகாரிகள் யார் என்பதை குறிப்பிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் விசாரணை ஆணையகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

என்கவுண்டர் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிலையில் என்கவுண்டர் தொடர்பாக 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என விசாரணை ஆணையகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், ஆணையகத் தலைவருக்கு ஒவ்வொரு விசாரணையின் போதும் 1.5 இலட்சம் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் ஏனைய உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் ஆணையக உறுப்பினர்களுக்கு சி.ஆர்.பி.எப். பொலிஸ்  பாதுகாப்பு வழங்குவதற்கும் தெலுங்கானா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், விசாரணை ஆணையகச் சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் அனைத்தும் இந்த ஆணையகத்துக்கு உள்ளதுடன் விசாரணைக்கான செலவு முழுவதையும் தெலங்கானா அரசு ஏற்க வேண்டும் எனவும் மன்று குறிப்பிட்டுள்ளது.

தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்புணர்வின் பின்னர் எரித்துப் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து நால்வர் கைது செய்யப்பட்டு என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இது போலி என்கவுண்டனர் எனத் தெரிவித்து இரண்டு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை ஆணையகத்தை உச்ச நீதிமன்றம்  நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.