‘ஹிட்லர், இடியாமீன் போன்றோரின் ஆட்சி அவசியமற்றது’

நாட்டின் ஆட்சியாளர் ஹிட்லராக பரிணமிக்க வேண்டும் என புத்த பெருமான் ஒருபோதும் கூறவில்லை. ஆகவே இந்த நாட்டுக்கு ஹிட்லர், இடியமீன் போன்றோரின் ஆட்சி அவசியமென்று யாராலும் கூற முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாத்தறை அக்குரஸ்ஸ மன்தினந்த பிரிவென்னுக்கு 125 வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டின் ஆட்சியை நிர்வகிப்பது தொடர்பில் புத்த பெருமான் எமக்கு போதனைகள் பல வழங்கியுள்ளார்.  ஆகவே அவரின் போதனையின் பிரகாரம் ஜனநாயக நாடு என்ற வகையில் நாம் எமது ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும்.

தன்னுடைய மக்களை அடக்கி கொலை செய்து ஆட்சியை முன்னெடுக்குமாறு புத்த பெருமான் ஆட்சியாளர்களுக்கு போதிக்கவில்லை.  இடைக்கிடையே சாமாதானமாக ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக  கலைந்து செல்லுமாறே புத்த பெருமான் ஆட்சியாளர்களுக்கு போதனை செய்தார். ஜனநாயக ஆட்சி கொண்டு செல்லப்படுவதும் அவ்வாறேயாகும். ஆட்சியாளர் ஹிட்லராக பரிணமிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை.

எமது நாட்டில் எம்மிடையே வேறுப்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகள் உள்ளன. நாம் யாருக்கு வாக்களிப்பது, பாராளுமன்றத்தில் எவ்வாறு நடந்துக்கொள்வது தொடர்பாக பல விதமான கருத்துகள் உள்ளன. பெளத்த தர்மத்தில் அதற்கு இடமுண்டு. அதனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் ஆட்சியாளர்கள் இடியமீன், ஹிட்லர் மற்றும் பொல்பொர்ட் போன்று செயற்பட வேண்டும் என யாராலும் கூற முடியாது. அவ்வாறான கருத்தை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !